

புதுடெல்லி,
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்ட முதல்கட்ட மலபார் கூட்டுப்பயிற்சி வங்கக்கடல் பகுதியில் கடந்த 3-ந்தேதி முதல் 4 நாட்கள் நடந்தன. இந்த நிலையில் இதன் 2-ம் கட்ட பயிற்சி வடக்கு அரபிக்கடல் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 4 நாட்கள் நடைபெறுகிறது.
இதில் இந்திய கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ரமாதித்யா, அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான நிமிட்ஸ் ஆகியவற்றை மையப்படுத்தி மற்ற நாடுகளின் போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்குவது தொடர்பான அதிநவீன பயிற்சிகளும் இதில் இடம்பெறுகின்றன. இந்திய போர்க்கப்பல்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்கள் ஆகியவை மேற்கு மண்டல கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் தலைமையில் பங்கேற்கும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.