இந்தியாவில் இருந்து கனடா செல்வோர் பாடு திண்டாட்டம்; 3-வது நாட்டில் கொரோனா பரிசோதனை கட்டாயம்

இந்தியாவில் இருந்து கனடா செல்வோர் பாடு திண்டாட்டமாகி உள்ளது. அவர்கள் மூன்றாவது நாட்டில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கனடா செல்வோர் பாடு திண்டாட்டம்; 3-வது நாட்டில் கொரோனா பரிசோதனை கட்டாயம்
Published on

நேரடி விமானம் ரத்து

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் நேரடி விமான சேவையை கனடா ரத்து செய்துள்ளது. கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கச்செல்கிற இந்திய மாணவர்கள், இணைப்பு விமானங்களில் செல்கிற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி மூன்றாவது நாட்டில் ஆர்.டி.பி.சி.ஆர். (கொரோனா மாதிரி பரிசோதனை) செய்யும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. கனடாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நாட்டில்தான் இந்த சோதனையை செய்து கொள்ள வேண்டும்.

ரூ.5 லட்சம் செலவு

இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஒரு விமானம், அடுத்த விமானத்தை ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அங்கிருந்து மெக்சிகோ போக வேண்டும். அங்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொண்டுதான் கனடாவின் வான்கூவர் நகருக்கு போக முடியும். இதனால் கனடாவுக்கு செல்வதற்கு சுற்றுலா போல பல நாடுகள் கடந்து செல்லவேண்டிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது. ரூ.1.5 லட்சத்தில் முடிய வேண்டிய கனடா பயணத்துக்கு ரூ.5 லட்சம் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது.

மாணவியின் தாயார் வேதனை

இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்திய மாணவி லரீனா குமார் தாயார் லவ்லி குமார், செய்தி நிறுவனம் ஒன்றிடம் வேதனையுடன் கூறியதாவது:-

என் மகளை கனடாவில் குடியேற்றுவதற்கு உதவும் விதத்தில் அவளுடன் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் அனைத்து திட்டங்களும் பாதிக்கப்பட்டு விட்டன. என் மகள் முதல் முறையாக தனியாக செல்வதுடன், 4 நாடுகள் கடந்து போக வேண்டியதிருக்கிறது. அவள் தலையில் கத்தி தொங்குகிறது. எந்த நிமிடத்திலும் விதிமுறைகளை அரசுகள் மாற்றலாமே...

தோஹாவுக்கு முதலில் டிக்கெட் பதிவு செய்தோம். பின்னர் அங்கு விதிமுறை மாறியது. ஓரளவு பணம்கூட திரும்பப்பெற வாய்ப்பு இல்லை. பணத்தைத் திருப்பித்தரும் திட்டம் கொண்ட ஓட்டல்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றன. எனவே ரூ.1.5 லட்சத்தில் முடிய வேண்டிய கனடா பயணத்துக்கு ரூ.5 லட்சம் வரை ஆகிறது. இத்துடன் மன அழுத்தமும் ஏற்பட்டு விடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இவரது மகள் லரீனா, கனடா எமிலி கார் பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு கலை மற்றும் வடிமைப்பு இளங்கலை மாணவி.

நீட்டிப்பு

இங்கிலாந்து, உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், இந்தியாவின் கொரோனா நிலவரத்தைக் கருத்தில் கொண்டு பயண கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன. ஆனால் கனடா அடுத்த மாதம் 21-ந் தேதி வரை இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை ரத்தை நீட்டித்து உள்ளது. லரீனா போன்ற பலரும் கனடா செல்ல அவஸ்தைகளை அனுபவிப்பதாக சொல்வது பரிதாபமாக உள்ளது. கொரோனாவே, உனக்கு நிரந்தரமாக முடிவு கட்டுவது எப்போது என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com