மூக்கு வழி கொரோனா தடுப்புமருந்து அடுத்த மாதம் அறிமுகம்

கொரோனாவுக்கு எதிராக மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து அடுத்த மாதம் அறிமுகம் ஆகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கொரோனா தோன்றிய சீனா உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய புதுவகை கொரோனா (பிஎப்.7) அலை வீசி வருகிறது. இந்தியாவில் தற்போது தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில், உலகின் முதல் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து நமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய தடுப்பூசிகளில் ஒன்றான கோவேக்சினை தயாரித்து வழங்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தார், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் கூட்டு சேர்ந்து 'பிபிவி154' என்ற பெயரில் மூக்கு வழியே செலுத்துகிற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளனர்.

மத்திய அரசு அனுமதி

இந்த மூக்கு வழி தடுப்பு மருந்து, 'இன்கோவாக்' என்ற வணிகப்பெயருடன் சந்தைக்கு வருகிறது.

இந்த தடுப்பு மருந்துக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியை கடந்த நவம்பர் மாதம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கியது. அதைத் தொடர்ந்து இந்த தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக (முன்எச்சரிக்கை டோஸ்) வழங்குவதற்கு கடந்த 23-ந் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்த தடுப்பு மருந்து 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளில் சோதிக்கப்பட்டு, வெற்றி காணப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது.

தனியார் விலை ரூ.800

இந்த தடுப்பு மருந்து கோ-வின் தளத்தில் இப்போது கிடைக்கிறது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான இந்த தடுப்பு மருந்து ஒரு 'டோஸ்' விலை ரூ.800 ஆகும். அதே நேரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இந்த தடுப்பு மருந்து ரூ.325 என்ற விலையில் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பு மருந்து, பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்தாக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தார் அறிவித்துள்ளனர். இந்த தடுப்பு மருந்து எளிய முறையில் இருப்பு வைத்துக்கொள்ளலாம், வினியோகிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பாரத் பயோடெக் நிறுவனத்தார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த தடுப்பு மருந்து ஜனவரி மாதம் 4-வது வாரத்தில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என தெரிவித்துள்ளனர்.

இந்த தடுப்பு மருந்தின் 3-வது கட்ட பரிசோதனையின்போது, இந்தியா முழுவதும் 14 இடங்களில் 3,100 பேருக்கு கொடுத்து அதன் நோய் எதிர்ப்புச்சக்தியும், பாதுகாப்பும் சோதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com