வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் எங்களுக்கு பாதிப்பு - வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா வேதனை

வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா வேதனையுடன் கூறினார்.
வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததால் எங்களுக்கு பாதிப்பு - வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா வேதனை
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் பலத்த மழை காரணமாக வெங்காய உற்பத்தி பாதித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் பரவலாக வெங்காய வினியோகம் பாதித்து, அதன் விலை உயர்ந்தது. இதனால் இல்லத்தரசிகள் கண்ணீர் சிந்தும் நிலை உருவானது.

இதையடுத்து வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. அது மட்டுமின்றி, நாடு முழுவதும் வியாபாரிகள் வெங்காயத்தை பதுக்குவதை தடுக்கும் வகையில் இருப்புவைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சில்லரை வியாபாரிகள் 10 ஆயிரம் கிலோவும், மொத்த வியாபாரிகள் 50 ஆயிரம் கிலோவும் இருப்பு வைக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால் அண்டை நாடான வங்காள தேசம் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது.

இந்த நிலையில் இந்தியா வந்துள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, தலைநகர் டெல்லியில் நேற்று இந்திய, வங்காளதேச வர்த்தக மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் வெங்காய ஏற்றுமதி தடை பிரச்சினையை எழுப்பினார்.

அவர், திடீரென்று வெங்காய ஏற்றுமதியை நீங்கள் (இந்தியா) நிறுத்தி விட்டீர்கள். இதனால் எங்கள் நாட்டு மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். நீங்கள் எதற்காக வெங்காய ஏற்றுமதியை நிறுத்தினீர்கள் என்பது எனக்கு தெரியாது. இதனால் நான் என்ன செய்தேன் தெரியுமா? எனது சமையல்காரரிடம் சமையலுக்கு வெங்காயத்தை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி விட்டேன் என்றார்.

மேலும், இது போன்ற சமயங்களில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு, செய்தால் அது நல்லது. அது உதவிகரமாக இருக்கும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட முடிவுகள் எடுக்கிறபோது அதை முன்கூட்டியே தெரிவித்து உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com