இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது
Published on

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் இருந்து விடுபடுவதற்கு இந்தியா திறம்பட போராடி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்து இருக்கிறது.

கொரோனா மீட்பைப்பொறுத்தமட்டில், வலுவான மருத்துவ கட்டமைப்பு வசதிகளும், நல்ல சிகிச்சையும் இருப்பதால் உலகளவில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 19 ஆயிரத்து 587 பேர் கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் 5,110 பேரும், மராட்டியத்தில் 2,570 பேரும், மேற்கு வங்காளத்தில் 1,271 பேரும் கொரோனாவில் இருந்து விடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டி விட்டது. சரியாக 1 கோடியே 16 ஆயிரத்து 859 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கொரோனா மீட்பு விகிதம், 96.36 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே ஒரு நாளில் புதிதாக 20 ஆயிரத்து 346 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 9 லட்சத்து 37 ஆயிரத்து 590 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாதிப்பு பதிவாகி இருக்கிறது.

நாடு முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 278 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மேலும் 222 பேர் கொரோனாவில் இருந்து மீள்வதற்கு பெற்ற சிகிச்சை பலன் அளிக்காமல் பலியாகி உள்ளனர். இதுவரையில் இந்தியாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 50 ஆயிரத்து 336 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

இன்று பலியான 222 பேரில், 66 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் 25 பேர், மேற்கு வங்காளத்தில் 22 பேர், டெல்லியில் 16 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர்.

கொரோனா பலி விகிதம் 1.45 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை பலியான 1 லட்சத்து 50 ஆயிரத்து 336 பேரில் அதிகபட்சமாக 49 ஆயிரத்து 825 பேரை பலி கொண்ட மராட்டிய மாநிலம், முதல் இடத்தில் நீடிக்கிறது. அதைத்தொடர்ந்து தமிழகம் இரண்டாவது இடம் வகிக்கிறது. பிற மாநிலங்களை பொறுத்தமட்டில் கர்நாடகத்தில் 12 ஆயிரத்து 124 பேரும், டெல்லியில் 10 ஆயிரத்து 625 பேரும், மேற்கு வங்காளத்தில் 9,863 பேரும், உத்தரபிரதேசத்தில் 8,441 பேரும், ஆந்திராவில் 7,125 பேரும், பஞ்சாப்பில் 5,412 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

பலியானோரில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டோர், பிற நாள்பட்ட நோய்களுடன் கொரோனாவும் வந்து தாக்கியதால் உயிரிழந்து இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

தொடர்ந்து 17-வது நாளாக நாட்டில் கொரோனாவில் இருந்து விடுபடுவதற்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

இன்றைய நிலவரப்படி பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 83 பேர் கொரோனாவில் இருந்த மீள்வதற்காக தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

இது மொத்த பாதிப்பில் 2.19 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவில் இருந்து மீள்வதற்கு ஒருவர்கூட சிகிச்சையில் இல்லை என்கிற நிலையை ஏற்படுத்த இந்தியா தனது போராட்டத்தை தொடர்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com