

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த ஜனவரி 3-ந் தேதி அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து ஜனவரி 16-ந் தேதி கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்தியாவில் இன்று இரவு 7 மணி தரவுகளின் படி 33 கோடியே 96 லட்சத்து 28 ஆயிரத்து 356 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
நாடுமுழுவதும் இன்று இரவு 7 மணி தரவுகளின் படி 33,96,28,356 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இரவு 7 மணி வரையிலான தகவலின்படி இன்று ஒரேநாளில் மட்டும் 38,17,661 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
18-44 வயதினரில் இன்று 21,80,915 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 84,107 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தமிழகம் உள்பட மொத்தம் 8 மாநிலங்களில் 18-44 வயதினர் பிரிவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.