

புதுடெல்லி,
கடந்த 2025-2026ம் நிதியாண்டில் இந்தியாவின் வருடாந்திர பாதுகாப்பு உற்பத்தி, ரூ.1.78 லட்சம் கோடியாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது, முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.54 லட்சம் கோடியை விட 15.6 சதவீதம் அதிகமாகும். 2020-2021ல் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.84,643 கோடியாக இருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போதைய பாதுகாப்பு உற்பத்தி 110 சதவீதம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ், உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மொத்த பாதுகாப்பு உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்கள் சுமார் 76 சதவீத பங்களிப்பை வழங்கிய நிலையில், தனியார் துறை 24 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது. இது 2024-25 நிதியாண்டில் 22 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சங்களை எட்டி வருகிறது. 2025-26ம் நிதியாண்டில் இந்தியாவின் ஆண்டு பாதுகாப்பு உற்பத்தி, இதுவரை இல்லாத உச்சமாக ரூ. 1.78 லட்சம் கோடியை எட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.