

ஸ்ரீஹரிகோட்டா,
ஐதராபாத்தை சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விக்ரம்-1 என்ற ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. 'ஆகமன்' (வருகை) எனப் பெயரிடப் பட்ட இந்த முதல் பயண ஏவுதல் திட்டம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த ராக்கெட் பூமிக்கு மேலே சுமார் 450 கி.மீ. உயரமுள்ள சுற்றுப்பாதையில் பல ஆய்வு கருவிகளை (பேலோடுகளை) நிலைநிறுத்த உள்ளது. இது ஒரு பெரிய தொழில்நுட்ப முன்னேற்றமாகும். முழுவதும் கார்பன் கலப்புக் கட்டமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட, 7 மாடிகள் கொண்ட, பல நிலைகளைக் கொண்ட ராக்கெட்டாகும்.
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம்-1 ஏவப்படுவதன் மூலம் தனியார் விண்வெளித் துறை ஒரு திருப்புமுனையான தருணத்தை எதிர்நோக்கியுள்ளது. அத்துடன், இந்திய மண்ணிலிருந்து ஒரு இந்திய தனியார் நிறுவனம் விண்கலங்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் முதல் முயற்சியாக இது அமைகிறது என்று விஞ்ஞானிகள் கூறினர்.