

ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்தவர் கொய்யாலா ரூத் ஜான் பால். சிறந்த மதிப்பெண்களுடன் மருத்துவ மாணவியாக 3-ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயத்தில் திருநங்கையாக மாறிய அவர், குடும்பத்தினரால் அவமதித்து அனுப்பப்பட்டார்.
பின்னர் மனதில் உறுதியேற்று கடும் சமூக போராட்டங்களுக்கு இடையே மருத்துவ படிப்பையும், தற்போது முதுநிலை மருத்துவ படிப்பையும் முடித்து சாதித்து உள்ளார்.
எம்.பி.பி.எஸ். படிப்பை நிறைவு செய்து டாக்டரான அவர், கடந்த 2023-ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் முதுநிலை அவசர மருத்துவ படிப்பில் சேர்ந்தார். நேற்று தேர்வு முடிவு வெளியானதில் அவர் தேர்ச்சி பெற்று உள்ளார். இதையடுத்து இந்தியாவின் முதல் திருநங்கை முதுநிலை மருத்துவர் என தன்னை அங்கீகரிக்க உரிமை கோரி உள்ளார்.
இது குறித்து டாக்டர் ரூத் ஜான்பாலிடம் கேட்ட போது அவர், "பல திருநங்கைகள் பிச்சை எடுக்கவும், பாலியல் தொழிலிலும் தள்ளப்பட்டு உள்ளனர். நான் எனது சொந்த காலில் நிற்க உறுதியேற்று சாதித்து உள்ளேன். நான் பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டதாக உணர்ந்து போராடினேன். திருநங்கையர் கடினமாக உழைத்தால், அவர்களுக்கான வாய்ப்புகள் தானாகவே தேடி வரும்" என்று கூறி உள்ளார்.