ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைப்பது எப்போது? மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் புதிய தகவல்

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைப்பது எப்போது என்பது பற்றிய புதிய தகவலை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் வெளியிட்டார்.
ககன்யான் திட்டத்தின்கீழ் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைப்பது எப்போது? மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் புதிய தகவல்
Published on

புதுடெல்லி, 

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் இந்தியாவின் கனவுத்திட்டம், ககன்யான் திட்டம் ஆகும்.

இந்த திட்டம் பற்றி பிரதமர் மோடி 2018-ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரை ஆற்றும்போது முதன்முதலாக தெரிவித்தார். இந்த திட்டம் ரூ.10 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படும் என அப்போது அவர் குறிப்பிட்டார்.

ரஷியாவின் சோயுஸ் விண்கலம் போன்ற இந்தியாவின் ககன்யான் விண்கலத்தில் வீரர்களை பூமியின் தாழ்வட்டப்பாதைக்கு அனுப்பி, ஏறத்தாழ 7 நாட்கள் விண்வெளி ஆய்வுக்குப்பின்னர் அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதுதான் இந்த ககன்யான் திட்டம் ஆகும். இந்த திட்டம் தாமதம் ஆகி வருகிறது.

டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியின் இடையே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ககன்யான் திட்டம் பற்றி கூறியதாவது:-

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் ககன்யான் திட்டத்தை சுதந்திரத்திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி இந்த ஆண்டு நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முதலில் திட்டமிட்டிருந்தது.

ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அதில் செல்லவேண்டிய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலத்தை செலுத்தும் முதல் சோதனைப்பயணம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும்.

அதைத்தொடர்ந்து வயோம் மித்ரா என்ற பெண்ணை போன்று தோற்றம் அளிக்கும் ரோபோ அடுத்த ஆண்டு அனுப்பி வைக்கப்படும்.

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பி வைப்பதற்காக 4 போர் விமானிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் ரஷியாவில் அடிப்படை பயிற்சி பெற்றுள்ளனர்.

2 சோதனைப்பயணங்களின் முடிவை ஆராய்ந்து, அதன் பின்னர் 2 வீரர்கள் 2024-ம் ஆண்டு விண்வெளிக்கு (தாழ்வட்டப்பாதைக்கு) அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com