நடப்பு ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. 6.1% வளர்ச்சி

நடப்பு ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1% வளர்ச்சி அடைந்து உள்ளது.
நடப்பு ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஜி.டி.பி. 6.1% வளர்ச்சி
Published on

புதுடெல்லி,

நாட்டில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், 2022-23 ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) நிலையான விலையின்படி, ரூ.160.06 லட்சம் கோடியாக இருக்கும் என திட்டமதிப்பிடப்பட்டு உள்ளது.

இது 2021-22 ஆண்டில் நாட்டின் ஜி.டி.பி.யான ரூ.149.26 லட்சம் கோடியை விட அதிகம் ஆகும்.

2022-23 ஆண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) தற்போதுள்ள விலையின்படி, ரூ.272.41 லட்சம் கோடியாக இருக்கும் என திட்டமதிப்பிடப்பட்டு உள்ளது.

இது 2021-22 ஆண்டில் ரூ.234.71 லட்சம் கோடியாக இருந்தது. இதனால், வளர்ச்சி விகிதம் 16.1 சதவீதம் ஆக உள்ளது.

அந்த அறிக்கையின்படி, 2022-23 ஆண்டுக்கான நாலாவது காலாண்டில் நிலையான விலையின்படி ஜி.டி.பி.யானது ரூ.43.62 லட்சம் கோடி என திட்டமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது, 2021-22 ஆண்டுக்கான நாலாவது காலாண்டில் ரூ.41.12 லட்சம் கோடி என்ற அளவில் இருந்தது. இதன் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதம் ஆகும்.

இதேபோன்று, 2022-23 ஆண்டுக்கான நாலாவது காலாண்டில் தற்போதுள்ள விலையின்படி, ஜி.டி.பி.யானது ரூ.71.82 லட்சம் கோடி என திட்டமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இது, 2021-22 ஆண்டுக்கான நாலாவது காலாண்டில் ரூ.65.05 லட்சம் கோடி என்ற அளவில் இருந்தது. இதன் வளர்ச்சி விகிதம் 10.4 சதவீதம் ஆகும்.

இதன்படி, இந்தியாவின் நடப்பு ஜனவரி-மார்ச் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1% வளர்ச்சி அடைந்து உள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், வெளியான 2022-23 ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியா 7 சதவீத வளர்ச்சி காணும் என முன்னறிவிக்கப்பட்டு இருந்தது.

அடுத்த நிதியாண்டான 2023-24-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) 6.5 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்கும் என அந்த அறிக்கை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், புதுடெல்லியில் நடந்த இந்திய தொழில்களுக்கான கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) கவர்னர் சக்தி காந்ததாஸ் சமீபத்தில் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 7 சதவீதத்திற்கு சற்று கூடுலானாலும் நான் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com