இந்தியாவின் ஹைட்ரஜன் ரெயில்தான் உலக அளவில் மிக வலிமையானது - பிரதமர் மோடி பெருமிதம்

எதிர்காலத்தில் ஹைட்ரஜன் ரெயில்களுக்கான கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுமென பிரதமர் மோடி பேசினார்.
இந்தியாவின் ஹைட்ரஜன் ரெயில்தான் உலக அளவில் மிக வலிமையானது - பிரதமர் மோடி பெருமிதம்
Published on

குருகிராம்,

அரியானா மாநிலம் ஜிந்திலிருந்து சோனிபட் வரை நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி, கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;

ரெயில்வே மின்மயமாக்கல்

”இந்திய ரெயில்வேயின் மின்மயமாக்கல் 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. 1925-க்கும் 2014-க்கும் இடைப்பட்ட சுமார் 90 ஆண்டுகளில், ஏறத்தாழ 30% ரெயில்கள் மட்டுமே மின்மயமாக்கப்பட்டிருந்தது. 70% டீசலில் இயங்கியது. ஆனால் கடந்த 12 ஆண்டுகளில் 99% ரெயில்வே மின்மயமாக்கப்பட்டுள்ளது.

இதனால்தான், போர்ச்சூழல், எரிபொருள் நெருக்கடி இருந்தபோதிலும், இந்திய ரெயில்கள் ஓடுவது நிற்கவில்லை. இதுபோன்ற சூழல் 2014-க்கு முன்பே ஏற்பட்டிருந்தால், டீசலை சார்ந்திருந்த ரெயில்களால் இந்தியா ஒரு பெரும் நெருக்கடியை சந்தித்திருக்கும்.

ஹைட்ரஜன் ரெயில்கள்

உலகில் ஹைட்ரஜன் ரெயில்கள் சில ஆண்டுகளில் தான் அறிமுகமாகியுள்ளன. இவை ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் பயன்பாட்டுக்கு வந்தன. தற்போது, ​​மூன்று அல்லது நான்கு நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் திறனைக் கொண்டுள்ளன. அந்த நாடுகளிலும்கூட, இத்தொழில்நுட்பம் இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

இருப்பினும், இந்தியாவின் ஹைட்ரஜன் ரெயிலின் சிறப்பம்சங்களைப் பற்றி அறியும்போது நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள். ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே இயக்கப்படும் இந்த ஹைட்ரஜன் ரெயில்தான் உலகின் மிக வலிமையான ஹைட்ரஜன் ரெயில். இதுவே இந்தியாவின் மிக நீளமான ஹைட்ரஜன் ரெயிலும் கூட. உலகின் பிற பகுதிகளில் ஹைட்ரஜன் ரெயில்கள் பொதுவாக மூன்று அல்லது நான்கு பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும் நிலையில், இந்தியா தனது முதல் முயற்சியிலேயே 10 பெட்டிகளைக் கொண்ட ஹைட்ரஜன் ரெயிலை அறிமுகப்படுத்தி உலக அளவில் முத்திரை பதித்துள்ளது. எதிர்காலத்தில் ஹைட்ரஜன் ரெயில்களுக்கான கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்."

இவ்வாறு அவர் பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com