'இந்தியாவின் ஜவஹர்' சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழி நடத்தும் ராகுல் காந்தி அஞ்சலி

16 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய பிரதமராக நேரு இருந்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் ஜவஹர்லால் நேரு. 1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். 16 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்த நேரு கடந்த 1964-ம் ஆண்டு மே 27-ம்தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்தநிலையில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள் (மே 27) இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நேருவின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்களும் நேருவுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்தநிலையில், நேருவின் நினைவு நாளையொட்டி ராகுல் காந்தி எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:-
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.ஒருங்கிணைந்ததொரு வலுவான இந்தியா என்ற கனவுடன் சுதந்திர இந்தியாவுக்காக வலுவானதொரு அடித்தளத்தை தமது தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய தலைமைப் பண்பால் அமைத்துக் கொடுத்து விட்டுச் சென்றவர் நேரு. சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றை அமைப்பதற்கான அன்னாரது பங்களிப்பு மதிப்பிற்கரியது. 'இந்தியாவின் ஜவஹர்' சித்தாந்தங்கள் எப்போதும் நம்மை வழி நடத்தும் என பதிவிட்டுள்ளார்.






