இந்தியாவில் மே மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2 லட்சம் கோடி

தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வசூல் 17-ல் இருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மே மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2 லட்சம் கோடி
Published on

புதுடெல்லி,

மாதந்தோறும் வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் வசூலான ஜி.எஸ்.டி.யின் மதிப்பு ரூ.2.01 கோடி என செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. இது முந்தைய மாதம் (ஏப்ரல்) வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டதை விட குறைவாகும்.

அதேநேரம் கடந்த ஆண்டு மே மாத வசூலை விட 16.4 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு மே மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த மாதம் மத்திய ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.35,434 கோடியாகவும், மாநில ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.43,902 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.09 லட்சம் கோடியாகவும் இருந்தது. செஸ் வரி மூலம் ரூ.12,879 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதற்கிடையே கடந்த மாதத்தில் திருப்பிச்செலுத்தப்பட்ட மொத்த தொகை ரூ.27,210 கோடி அதாவது 4 சதவீதமாக இருந்ததாக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. மராட்டியம், மேற்கு வங்காளம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற பெரிய மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வசூல் 17-ல் இருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதைப்போல குஜராத், ஆந்திரா, தெலுங்கானா போன்ற பெரிய மாநிலங்களும் 6 சதவீதம் வரை வரி அதிகரிப்பை கொண்டிருந்தன. அதேநேரம் மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் சராசரியாக 10 சதவீத நடுத்தர உயர்வை பெற்றிருந்தன.

எனவே நாடு முழுவதும் சராசரி வளர்ச்சி ஒரே மாதிரியாக பிரதிபலிக்கவில்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கு துறை சார்ந்த அல்லது பருவகால காரணிகள் காரணமாக இருக்கலாம் எனக்கூறியுள்ள அவர்கள், இதற்கு ஆழமான தரவு அடிப்படையிலான பகுப்பாய்வு தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com