

புனே
இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து வியக்கத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டில் வெறும் 248 கி.மீ. ஆக இருந்த நாட்டின் செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரெயில் வழித்தடங்களின் நீளம் தற்போது 1,200 கி.மீ. ஆக அதிகரித்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
புனே மெட்ரோவின் 3-வது வழித்தடமான 23 கி.மீ. நீளமுள்ள பிங்க் லைன் திட்டத்தை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:-
நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும்
கடந்த 2014-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவை இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தினமும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
உருவெடுத்துள்ளது. நகரங்கள் வெறும் மக்கள் வசிக்கும் இடங்கள் மட்டுமல்ல; அவை பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய மையங்களாகவும் திகழ்கின்றன.
புனே நகரம் தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல், மருந்துத் தயாரிப்பு, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், புத்தாக்கம் மற்றும் உற்பத்தித் துறைகளில் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. மெட்ரோ இணைப்பு விரிவாக்கம் நகரின் பழைய மற்றும் புதிய பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்தை வலுப்படுத்தும்.
மேலும், மெட்ரோ பயணத்தால் மக்களின் நேரம் வீணாகுவதை தவிர்த்து, நகரத்தின் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும். இதன் பலன் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.8,300 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்டுள்ள புனே மெட்ரோ பிங்க் லைன், ஹிஞ்சேவாடி தகவல் தொழில்நுட்பப் பூங்காவையும் மாவட்ட நீதிமன்ற மெட்ரோ நிலையத்தையும் இணைக்கிறது.
இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் தினசரி பயணம் எளிதாகும். போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், தனியார் வாகனங்களைச் சார்ந்திருக்கும் நிலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தின் சிறப்பம்சமாக, மெட்ரோ ரயில்களைப் பெண்களே இயக்க உள்ளனர். மேலும், மின்சாரத் தேவையில் சுமார் 30 சதவீதம் சூரிய மின்சக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
புனே மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் நான்கு புதிய வழித்தடங்களை அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
லைன் 2A, 2B, 4 மற்றும் 4A என நான்கு வழித்தடங்கள் நகரின் முக்கிய குடியிருப்புப் பகுதிகள், வணிக மையங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பகுதிகளை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக நான்கு புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கான திட்ட முதலீடு சுமார் ரூ.21,800 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.