கொரோனாவை எதிர்கொள்ள இந்தியா ரூ.74 கோடி நிதி: சார்க் தலைவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள அவசர நிதி உருவாக்கி, அதற்கு இந்தியா சார்பில் ரூ.74 கோடி ஒதுக்குவதாக சார்க் நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடியபோது பிரதமர் மோடி அறிவித்தார்.
கொரோனாவை எதிர்கொள்ள இந்தியா ரூ.74 கோடி நிதி: சார்க் தலைவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 6 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடி ஒரு கூட்டு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலம் ஆலோசனை தெரிவித்தார்.

இதற்கு சார்க் நாடுகளின் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்ததுடன், தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்வதாக தெரிவித்தனர். இதையொட்டி நேற்று காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி சார்க் நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

இதில் இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவு ஜனாதிபதி இப்ராகிம் முகமது சாலிஹ், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, பூடான் பிரதமர் லோடாய் ஷெரிங், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி, பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் (சுகாதாரம்) ஜாபர் மிர்சா ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் கூறியதாவது:-

தெற்காசிய பிராந்தியத்தில் 150-க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். தயாராக இருப்போம், ஆனால் பீதியடைய வேண்டாம் என்பதே கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிப்பதில் இந்தியாவின் வழிகாட்டும் மந்திரமாக உள்ளது.

கோவிட்-19 அவசர நிதி ஒன்றை நாம் உருவாக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். இதில் நாம் அனைவரும் விருப்பப்பட்ட பங்களிப்பை வழங்கலாம். இந்த நிதிக்கு இந்தியா முதல்கட்டமாக ரூ.74 கோடி வழங்கி இதனை தொடங்கி வைக்கிறது.

இந்தியாவில் நாங்கள் டாக்டர்கள், சிறப்பு நிபுணர்கள் கொண்ட ஒரு அதிரடி நடவடிக்கை குழுவை உருவாக்கியுள்ளோம். தேவைப்பட்டால் அந்த குழுவை நாங்கள் உங்களுக்கு அனுப்ப தயாராக இருக்கிறோம்.

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர், அவருடன் தொடர்பில் இருந்தவர் ஆகிய விவரங்களை ஒருங்கிணைக்க ஒரு கண்காணிப்பு மென்பொருளையும் உருவாக்கியுள்ளோம். இதர சார்க் நாடுகளுக்கும் இந்த மென்பொருளை வழங்க தயாராக இருக்கிறோம்.

தெற்காசிய பிராந்தியத்தில் தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நாம் ஒரு பொதுவான ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும். இதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உதவ தயாராக உள்ளது.

பல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 1,400 இந்தியர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம். இதில் சில அண்டைநாடுகளுக்கும் இந்தியா உதவி செய்துள்ளதுஎன்று பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியை பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப பயன்படுத்திக் கொண்டது. ஜாபர் மிஸ்ரா கூறும்போது, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வசதியாக காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றார்.

மாலத்தீவு ஜனாதிபதி, இந்த சூழ்நிலையை எந்த ஒரு நாடும் தனியாக எதிர்கொள்ள முடியாது என்றார்.

இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே கூறும்போது, கொரோனா வைரஸ் தொடர்பான பிரச்சினைகளை கவனிக்க சார்க் நாடுகளின் மந்திரிகள் அளவிலான குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com