உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்; 12-ந்தேதி இந்திய கடற்படையில் இணைப்பு

மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 'மங்ரோல்' கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்; 12-ந்தேதி இந்திய கடற்படையில் இணைப்பு
Published on: 

மும்பை,

கொச்சியில் உள்ள கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) நிறுவனத்தால் கட்டப்பட்ட மூன்றாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான 'மங்ரோல்', வரும் அக்டோபர் 12-ந்தேதி மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.

மேற்கு கடற்படைத் தளத்தின் தலைமைத் தளபதியான துணை அட்மிரல் சஞ்சய் வத்சயன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், மூத்த கடற்படை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் ஆகியவற்றின் பிரதிநிதிகள், முன்னாள் வீரர்கள் மற்றும் உள்நாட்டு ஆயுதம் மற்றும் சென்சார் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர நகரமும், முக்கிய மீன்பிடித் துறைமுகமுமான மங்ரோலின் பெயர் இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்ட மங்ரோல் போர்க்கப்பல், வடிவமைப்பு, கட்டுமானம், மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்களை பிரதிபலிக்கிறது.

மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டங்களின் கீழ் சி.எஸ்.எல். நிறுவனத்தால் இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது. கடலோர மற்றும் ஆழமற்ற நீர்நிலைகளில் நீருக்கடியில் உள்ள அச்சுறுத்தல்களை கண்டறிந்து முறியடிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மங்ரோல் கப்பலில், அபய் ஹல்-மவுண்டட் சோனார்(Abhay Hull-Mounted Sonar), இலகுரக டார்பிடோக்கள்(Torpedoes), உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் ஏவுகணை மற்றும் ‘மாரீச்’(Mareech) மேம்பட்ட டார்பிடோ பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com