சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இந்திரா பானர்ஜி ஆகஸ்டு 7ந்தேதி பதவியேற்பு

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இந்திரா பானர்ஜி ஆகஸ்டு 7ந்தேதி பதவியேற்கிறார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இந்திரா பானர்ஜி ஆகஸ்டு 7ந்தேதி பதவியேற்பு
Published on

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலிஜியத்தில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப், ஏ.கே.சிக்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அமைப்பின் கூட்டத்தில், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டது. அகில இந்திய அளவில் ஐகோர்ட்டு நீதிபதிகளின் பணிமூப்பு வரிசையில், இந்திரா பானர்ஜி 4-ம் இடத்தில் உள்ளார்.

கொலிஜியத்தின் சிபாரிசை மத்திய அரசு ஏற்று கொண்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இந்திரா பானர்ஜி ஆகஸ்டு 7ந்தேதி பதவியேற்கிறார்.

இதனால் சுப்ரீம் கோர்ட்டில் தற்போது உள்ள பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 3 ஆக உயரும். தற்போது, ஆர்.பானுமதி, இந்து மல்கோத்ரா ஆகிய 2 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

இந்திரா பானர்ஜி, 2002-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி, கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். 2017-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதியில் இருந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றி வருகிறார்.

அவருடன், ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வினீத் சரணையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் சிபாரிசு செய்துள்ளது.

மேலும், உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் மீண்டும் சிபாரிசு செய்துள்ளது. ஏற்கனவே, கடந்த ஜனவரி 10-ந் தேதி, அவரது பெயரை கொலிஜியம் சிபாரிசு செய்திருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், குட்டியில் மேத்யூ ஜோசப் ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகின்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஆகஸ்டு 7ந்தேதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதனை தொடர்ந்து இந்திரா பானர்ஜிக்கு வருகிற 6ந்தேதி பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com