2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 31 ஆயிரம் புகார்கள்: தேசிய மகளிர் ஆணையம்

நாடு முழுவதும் கடந்த ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக சுமார் 31 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டு இருப்பதாகவும், கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பிறகு இதுவே அதிகம் எனவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது.
2021-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 31 ஆயிரம் புகார்கள்: தேசிய மகளிர் ஆணையம்
Published on

தேசிய மகளிர் ஆணையம்

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தேசிய மகளிர் ஆணையத்தின் தரவுகள் உறுதிப்படுத்தி உள்ளன.

அந்தவகையில் கடந்த 2021-ம் ஆண்டில் நாடு முழுவதிலும் இருந்து 30,864 புகார்கள் பெறப்பட்டு இருப்பதாக ஆணையம் தெரிவித்து உள்ளது. இது கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பிறகு மிகவும் அதிகம் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்து உள்ளது. அந்த ஆண்டில் மொத்தம் 33,906 புகார்கள் பதிவாகி இருக்கிறது.

உத்தரபிரதேசத்தில் அதிகம்

இதைப்போல கடந்த 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2021-ல் பதிவான புகார்கள் 30 சதவீதம் அதிகம் எனவும், 2020-ம் ஆண்டில் 23,722 புகார்கள் மட்டுமே பதிவாகி இருந்ததாகவும் மகளிர் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் உள்ள 30,864 புகார்களில் பாதிக்கு மேற்பட்டவை அதாவது 15,828 புகார்கள் உத்தரபிரதேசத்தில் பதிவானவை ஆகும். அடுத்ததாக டெல்லியில் 3,336 புகார்களும், மராட்டியத்தில் 1,504 புகார்களும், அரியானாவில் 1,460 புகார்களும், பீகாரில் 1,456 புகார்களும் பதிவாகி உள்ளன.

வரதட்சணை கொடுமை

மொத்த புகார்களில், பெண்களின் கண்ணியத்துக்கு எதிரான உரிமை மீறல் புகார்கள் 11,013, குடும்ப வன்முற புகார்கள் 6,633, வரதட்சணை கொடுமை புகார்கள் 4,589 என அதிக அளவில் பதிவாகி உள்ளன.

கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3,100-க்கு மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாக ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு ஒருபுறம் இருந்தாலும், மகளிர் ஆணையத்தின் செயல்பாடு தொடர்பான விழிப்புணர்வுகளும் இந்த புகார்கள் அதிகரிப்பதற்கு காரணம் என தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com