இந்தியா வரும் முன் மரபணு பரிசோதனை செய்து கொண்ட இந்தோனேசிய ஜனாதிபதி

எங்களுடைய அன்றாட வாழ்க்கையில், பழமை வாய்ந்த இந்திய நாகரீகத்தின் தாக்கம் வலுவாக உள்ளது என இந்தோனேசிய ஜனாதிபதி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
நாட்டின் 76-வது குடியரசு தின கொண்டாட்டங்கள் டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை பகுதியில் இன்று நடைபெற்றன. இதில் கலந்து கொள்வதற்காக, இந்தோனேசியாவில் இருந்து அந்நாட்டின் ஜனாதிபதி பிரபோவோ சுபியந்தோ இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருடைய முதல் இந்திய பயணம் இதுவாகும். அவரை ஜனாதிபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் முறைப்படி வரவேற்றனர்.
இந்நிலையில், டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் சுபியந்தோவுக்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்து நிகழ்ச்சியின்போது பேசிய இந்தோனேசிய ஜனாதிபதி பிரபாவோ சுபியந்தோ, சில வாரங்களுக்கு முன், என்னுடைய மரபணு வரிசையை பற்றிய பரிசோதனையையும் மற்றும் மரபணு பரிசோதனையையும் மேற்கொண்டேன்.
அதனை செய்த பின்பு, பரிசோதனை முடிவில், என்னுடையது இந்திய மரபணு என என்னிடம் கூறினார்கள். இந்திய இசையை நான் கேட்கும்போது, நடனம் ஆட தொடங்கி விடுவேன் என்பது எல்லோருக்கும் தெரியும் என கூறினார். அவருடைய இந்த பேச்சு அடங்கிய வீடியோவை ஜனாதிபதி அலுவலகம் இன்று காலை வெளியிட்டது.
அவர் தொடர்ந்து பேசும்போது, இந்தியாவும், இந்தோனேசியாவும் நீண்டகால, மிக பழமையான வரலாறை கொண்டது. நாம் நாகரீக தொடர்புகளை கொண்டிருக்கிறோம். தற்போது கூட எங்களுடைய மொழியின் மிக முக்கிய பகுதி சமஸ்கிருதத்தில் இருந்து வருகிறது. இந்தோனேசியாவில் உள்ள பல பெயர்கள் உண்மையில் சமஸ்கிருத பெயர்கள்.
எங்களுடைய அன்றாட வாழ்க்கையில், பழமை வாய்ந்த இந்திய நாகரீகத்தின் தாக்கம் வலுவாக உள்ளது. அதுவும் எங்களுடைய மரபியலின் பகுதியாக இருக்கும் என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதேபோன்று, அவருடைய மந்திரிகள் பலர் அடங்கிய குழுவினர், பாலிவுட்டின் பிரபல பாடலான, குச் குச் ஹோத்தா ஹை என்ற பாடலை பாடி சுற்றியிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.






