

ஜகார்த்தா,
கல்வித் தகுதி குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்தோனேசியா நாட்டின் துணை ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் துணை ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் மகனுமான ஜிப்ரான் ரகாபுமிங் ராகா(வயது 39), தனது அயல்நாட்டு கல்வி குறித்து சில ஆவணங்களை தேர்தலுக்கு முன்பு சமர்ப்பித்திருந்தார். ஆனால் அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் தேர்தலுக்கான தகுதியை பூர்த்தி செய்வதாக இல்லை என அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து, 8 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இந்தோனேசியா நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஜிப்ரான் ரகாபுமிங்கின் கல்வித் தகுதி குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டு முறைகேடு உறுதி செய்யப்பட்டால் ஜிப்ரான் ரகாபுமிங் பதவிநீக்கம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது.
இந்த நிலையில், ஜிப்ரான் ரகாபுமிங், இன்று தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தில், நாட்டின் மிக உயர்ந்த சட்டமியற்றும் அமைப்பான மக்கள் ஆலோசனைக் குழுவின் தலைமையிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை இந்தோனேசியாவின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவை சந்தித்த அவர், அரசியல் சர்ச்சைகளை தவிர்க்க தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
ஆனால், அப்போது ஜிப்ரான் ரகாபுமிங்கிடம் சிறிது காலம் பொறுமையாக இருக்குமாறு ஜனாதிபதி பிரபோவோ அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று ஜிப்ரான் ரகாபுமிங் தனது துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.