

சென்னை
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து கோர்ட் அனுமதியுடன் ஒரு நாள் விசாரணைக்கு அழைத்து சென்றது.
விசாரணை முடிந்ததும் கார்த்தி சிதம்பரம் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக அங்கு நீதிமன்ற வளாகத்தில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்த சிதம்பரம், அவரை தைரியத்துடன் இருக்க வேண்டும் என்றும் தான் இருப்பதாகவும் கூறினார்.
நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்கள் தொடங்கியது. ஐ.என்.எக்ஸ் மீடியா இந்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரலாக துஷார் மேத்தா சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக ஆஜரானார்.
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் செய்தது. நீதிமன்றத்தில் செல்போன் பயன்படுத்திய நளினி சிதம்பரத்திற்கு சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. ஆடிட்டர் பாஸ்கரன் ஜாமீன் மனு மீது மார்ச் 7 ந்தேதி உத்தரவிடப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
கார்த்தி சிதம்பரத்திடம் ஒருநாள் விசாரணையில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை. வழக்கு தொடர்பான அடிப்படை கேள்விக்கே அவர் பதில் அளிக்க மறுக்கிறார். விசாரணையில் கார்த்தி சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. நழுவல் போக்கு காட்டுகிறார்.
சிபிஐ தரப்பில் கார்த்தி சிதம்பரத்தை மேலும் 2 வாரம் காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை விடப்பட்டது. கார்த்தி சிதம்பரம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
கார்த்தி சிதம்பரம் பல்வேறு நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகளுக்கு தெளிவான சான்றுகள் உள்ளன. எங்களுக்கு மின்னஞ்சல்கள் உள்ளன மற்றும் ஐஎன்எக்ஸ் ஊடகங்களுக்கு சாதகமாக இருந்த காலத்தில் ஏஎஸ்சிபிஎல்லுக்கு
(Advantage Strategic Consultancy Private Limited) பணம் கொடுக்கப்பட்ட பொருள் குறிப்புகள் வழங்கப்பட்டன. கார்த்தியை விசாரிக்க உள்நோக்கம் எதுவும் இல்லை. ஆதாரங்கள் அடிப்படையிலேயே விசாரிக்க காவல் தேவை என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.
நீதிமன்றத்தில் நேற்றிரவு கார்த்தி சிதம்பரம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக அவரது வழக்கறிஞர்கள் கூறினர். உடல் நலம் இல்லை என தான் கூறாத நிலையில் அவர் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. மருத்துவமனை பொது வார்டில் கார்த்தி சிதம்பரம் 8 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதாக கூறினர்.
கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதாடிய அபிஷேக் சிங்வி கார்த்தி மீது போடப்படுள்ள வழக்கு வினோதமானது. கார்த்தியை கைது செய்தது ஏன் என்று சி.பி.ஐ.விளக்கம் அளிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு கார்த்தி ஒத்துழைப்பு அளித்தார். சம்மன் அளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிஐ எப்படி கூற முடியும் இந்திராணி முகர்ஜியின் வாக்கு மூலத்தை சிபிஐ வெளியிட்டது ஏன்? என வாதிட்டார்.