ஷீனா போரா கொலை வழக்கில் ஜாமீன்: சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் இந்திராணி

ஷீனா போரா கொலை வழக்கில் கைதான இந்திராணி முகர்ஜி 6½ ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
ஷீனா போரா கொலை வழக்கில் ஜாமீன்: சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் இந்திராணி
Published on

கோர்ட்டு ஜாமீன்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை காதலித்ததால், ஷீனாபோராவை அவரது தாய் இந்திராணி கொலை செய்ததாக கூறப்பட்டது.

இந்த வழக்கில் இந்திராணியின் முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர் ராய், பீட்டர் முகர்ஜி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் இந்திராணி முகர்ஜிக்கு கடந்த புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

விடுதலையானார்...

இதையடுத்து ஜாமீனில் வெளிவருவதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு நேற்று மாலை அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். மாலை 5.30 மணி அளவில் பைகுல்லா பெண்கள் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

வெள்ளை நிற சுடிதார் அணிந்து டை அடித்த சிகை அலங்காரத்துடன் புது பொலிவுடன் மகிழ்ச்சியாக தோன்றிய அவர், வெளியே காத்திருந்த தனது வக்கீல் சனா ரயீசை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்களை நோக்கி கை அசைத்தார்.

மகிழ்ச்சியாக இருக்கிறேன்

பின்னர் தனது வக்கீலின் சொகுசு காரில் ஏறி தனது ஒர்லி அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றார். அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். தான் மகிழ்ச்சியாக இருப்பதாக மட்டும் அவர்களிடம் தெரிவித்தார்.

சிறையில் இருந்தபோது நரைந்த முடியுடன் காணப்பட்டார். வெளியே வந்தபோது அவரின் புதிய தோற்றம் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளை பரவ செய்தது. பலர் சிறையில் அழகு நிலையம் வைத்திருக்க கூடும் என்ற பதிவுகளை வெளியிட்டு இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com