

மும்பை,
ஷீனா போரா என்ற இளம்பெண் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அவரது தாயாரும், தொழிலதிபருமான இந்திராணி முகர்ஜி, மகாராஷ்டிரத்தில் உள்ள பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், அதே சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு பெண் கைதி, கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். சிறை அதிகாரி ஒருவர் மஞ்சுவை கடுமையாக தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியறுத்தி பெண் கைதிகள் பலர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சிறையில் கலவரத்தில் ஈடுபட்டதாக 200 கைதிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் இந்திராணி முகர்ஜியும் ஒருவர் ஆவார். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிறை வாடர்ன் கொடூரமாக தாக்கியதாலேயே பெண் சிறைக்கைதி உயிரிழந்தாக இந்திராணி முகர்ஜி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். சக கைதி கொல்லப்பட்டது குறித்த முக்கியமான தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும், இந்த தகவல்களை வெளியிடகூடாது என்று சிறைத்துறை அதிகாரிகள் மிரட்டல் கொடுப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், இந்த கொலை தொடர்பாக தான் சாட்சியம் அளிக்க விரும்புவதாகவும் மும்பை நீதிமன்றத்தில் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.