ஜெயிலில் தாக்கப்பட்டதாக இந்திராணி முகர்ஜி கூறியது உண்மைதான்: மருத்துவ அறிக்கையில் அம்பலம்

இந்திராணி முகர்ஜி சிறையில் தாக்கப்பட்டது மருத்துவ அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
ஜெயிலில் தாக்கப்பட்டதாக இந்திராணி முகர்ஜி கூறியது உண்மைதான்: மருத்துவ அறிக்கையில் அம்பலம்
Published on

மும்பை,

மும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மஞ்சுளா என்ற பெண் கைதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து சிறையில் வன்முறை வெடித்தது. கைதி மஞ்சுளாவை சிறை அதிகாரிகள் அடித்து கொன்றுவிட்டதாக கூறி, மற்ற பெண் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறை கட்டிடத்தின் மேற்கூரையில் ஏறி கோஷமிட்டனர்.சிறை வளாகத்தில் உள்ள பொருட்களை சூறையாடி, ஆவணங்களை தீ வைத்து எரித்தனர்.

இதன் காரணமாக பைகுல்லா சிறையில் பெரும் பதற்றம் நிலவியது. பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயில் காவலர்கள் உள்பட 12 பேர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.உயிரிழந்த கைதி மஞ்சுளா சிறை அதிகாரிகளால் உடல்ரீதியாக சித்ரவதைக்குள்ளாகி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறை அதிகாரிகள் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதிகளில், ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அவரது தாய் இந்திராணி முகர்ஜியும் அடங்குவார்.பெண் கைதிகள் போராட்டத்தை இந்திராணி முகர்ஜி தூண்டியதாக அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், தன்னை சிறை அதிகாரிகள் கொடூரமாக தாக்கியதாகவும் மிகவும் தரக்குறைவாக பேசியதாகவும் மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் இந்திராணி முகர்ஜி தனது வழக்கறிஞர் மூலமாக முறையிட்டார். இதையடுத்து, இந்திராணி முகர்ஜி மருத்துவ பரிசோதனை எடுக்க உத்தரவிட்டார். மருத்துவ பரிசோதனை அறிக்கையின் முடிவில், இந்திராணி முகர்ஜி சிறை அதிகாரிகளால் கொடுரமாக தாக்கப்பட்டது நிரூபணமாகியுள்ளது என்று ஜெஜெ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பரிசோதனை அறிக்கை சிபிஐ நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com