

ஆலோசனை கூட்டம்
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அமைந்தவுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் பேரில் தற்போது பன்னாட்டு நிறுவனங்கள் புதுவையில் தொழில் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதாவது புதுவை சேதராப்பட்டு பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் தொழில் நகரம் அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக் குமார், அரசு செயலாளர் வல்லவன் மற்றும் ஷெல், டெக்வேஸ் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதுச்சேரியில் விரைவில் ஒரு தொழில் நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
இது தொடர்பாக முதல்-அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தொழில் நகரத்தின் மூலம் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, புதுச்சேரி அரசுக்கு வருவாயும் கிடைக்கும். இதன் மூலம் புதுச்சேரியில் உள்ள படித்த இளைஞர்கள் வெளியூர்களுக்கு சென்று வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.தற்போது வெளியூரில் வேலை செய்து கொண்டிருக்கும் புதுச்சேரி இளைஞர்கள் மீண்டும் இங்கேயே வந்து வேலை
செய்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பயிற்சி மையம்
இந்த தொழில் நகரத்தில் கம்ப்யூட்டர் உள்பட அனைத்து வகையான தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களும் வரவிருக்கின்றன. மேலும், இந்த தொழில் நகரத்தில் மக்களின் மனித வளத்தை மேம்படுத்தும் வகையில் ஓர் பயிற்சி மையம் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மக்களின் தொழில் திறமைகள் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.