

திருவனந்தபுரம்,
பள்ளி மாணவிகளை தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கேரளம் மாநிலம், மூணாறு பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிகள் 2 பேர் பள்ளிக்கு 3 நாட்களாக தாமதமாக வந்துள்ளனர். இது குறித்து ஆசிரியர்கள் கேட்டபோது, சமூக வலைதளம் மூலம் பழகிய 2 பேரை சந்திக்க சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர்கள், மாணவிகளின் பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மூணாறு போலீசார் நடத்திய விசாரணையில், சமூக வலைதளம் மூலம் அறிமுகமான 2 பேர் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இதில் தொடர்புடையவர்கள் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் திண்டுக்கல்லில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மூணாறு போலீசார் திண்டுக்கல் சென்று தமிழக போலீசாரின் உதவியுடன் சுரேஷ் (வயது 21) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் சுரேசுடன் பழகி வந்துள்ளார். கடந்த 15-ந்தேதி சுரேஷ் தனது நண்பருடன் மூணாறுக்கு வந்து, அந்த மாணவியையும், அவரது தோழியையும் சந்தித்துள்ளார். பின்னர் 2 பேரையும் ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்" என்று தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் மூணாறு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.