

புதுச்சேரி,
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதியில் உள்ள பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் இடைத்தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல்துறை தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தட்டாஞ்சாவடி தொகுதியில் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் வாக்குப்பதிவை சுமுகமாக நடத்துவதற்கு வசதியாக நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆகிய 2 நாட்களும் தட்டாஞ்சாவடி தொகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்த நாட்களில் எந்த வகுப்புகளோ, நிகழ்ச்சிகளோ, பிற செயல்பாடுகளோ நடத்தக்கூடாது. பள்ளி வளாகங்கள் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறையினரின் ஏற்பாடுகளுக்கு திறந்திருக்க வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.