கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர பரிசோதனை தேவை - மன்மோகன் சிங் கருத்து

கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர பரிசோதனை நடத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறி உள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர பரிசோதனை தேவை - மன்மோகன் சிங் கருத்து
Published on

புதுடெல்லி,

கொரோனாவை கட்டுப்படுத்துவது மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கவும், கட்சியின் கருத்துகளை தெரிவிக்கவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் குழு ஒன்றை காங்கிரஸ் அமைத்து உள்ளது. இந்த குழு மத்திய அரசுக்கு தனது யோசனைகளை தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கருத்து தெரிவிக்கையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, அவர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஆலோசிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் சமீபத்தில் கூறுகையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப ஏற்பாடு செய்வதோடு அவர்களுக்கு நிதி மற்றும் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கொரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டி இருக்கிறார்.

இந்தநிலையில், கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனை வசதிகள் போதிய அளவில் இல்லாதது ஒரு பிரச்சினையாக இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறி உள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர பரிசோதனை தேவை என்றும், சிறந்த பரிசோதனை வசதிகள் இல்லாமல் நோய்க்கிருமியின் அச்சுறுத்தலை நாம் சமாளிக்க முடியாது என்றும் அவர் கூறி இருக்கிறார்.

இதேபோல் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேசும், கொரோனா தொற்று பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்து உள்ளார். ஊரடங்கு காலம் முடிந்த பின்னர் பொருளாதாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் ஆய்வு செய்து ஒருமித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணிஷ் திவாரி கூறி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com