இந்தியாவில் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படும் - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

இந்தியாவில் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
இந்தியாவில் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படும் - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
Published on

புதுடெல்லி,

மத்திய ஆயுஷ் அமைச்சகம், ஆண்டுதோறும் தந்தேராஸ் தினத்தை ஆயுர்வேத தினமாக கொண்டாடி வருகிறது. அதுபோல், நேற்று 5-வது ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேசிய ஆயுர்வேத நிலையத்தையும், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தையும் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதில், ஜாம்நகர் நிலையத்துக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனம் என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் நிலையத்துக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய மருத்துவம்

இந்த நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோஸ் ஆதனம் கிப்ரியசஸ் பேசிய வீடியோ படம் ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் சர்வதேச பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்க உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த மையம், பாரம்பரிய மருத்துவம் மற்றும் சமகால மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கு பயன்படும். ஆரோக்கியமான உலகத்தை உருவாக்கும் பயணத்தின் ஒரு அங்கமாக பாரம்பரிய மருத்துவத்தின் பங்கை வலுப்படுத்த இம்மையம் உதவும் என்று கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரது அறிவிப்புக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். பிரதமர் மோடி பேசியதாவது:-

பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்க இந்தியாவை உலக சுகாதார அமைப்பு தேர்வு செய்திருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை ஆகும். அதை நோக்கி இந்தியாவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

உலகத்துக்கே மருந்தகமாக இந்தியா உருவெடுத்ததுபோல், இந்த மையம் சர்வதேச ஆரோக்கியத்துக்கான மையமாக உருவெடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com