சர்வதேச யோகா தினம்; உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஆந்திர அரசு

விசாகப்பட்டினம் யோகா தின நிகழ்ச்சியில் 5 லட்சம் பேரை பங்கேற்க வைத்து கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினம்; உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஆந்திர அரசு
Published on

அமராவதி,

ஐ.நா சபையில் கடந்த 2014-ம் ஆண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறினார். அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என அப்போது அவர் பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்தன. இதனை தொடர்ந்து, 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது.

இந்நிலையில் 11-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில், உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தின் ஆர்.கே.கடற்கரையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

இதனிடையே, யோகா தினத்தை முன்னிட்டு புதிய உலக சாதனையை படைக்கும் முயற்சியில் ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது. இதன்படி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சியில் 5 லட்சம் பேரை பங்கேற்க வைத்து கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் 1.47 லட்சம் பேர் பங்கேற்றதே இதுவரையிலான அதிகபட்ச சாதனையாக இருந்து வருகிறது. அந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. அதே சமயம், ஆந்திராவில் இன்று ஒரே நாளில் சுமார் 1 லட்சம் இடங்களில் யோகா நிகழ்ச்சிகளை நடத்தி, அவற்றில் சுமார் 2 கோடி மக்களை பங்கேற்க வைத்து புதிய சாதனை படைக்கும் முயற்சியையும் ஆந்திர அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com