

கொல்கத்தா,
பிரதமர் மோடி தலைமையில் கொல்கத்தாவில் யோகா பயிற்சி நடைபெற்றது.
உலகுக்கு இந்தியா வழங்கிய சிறந்த கொடைகளில் ஒன்று, யோகா. இந்த வாழும் கலையை மேன்மைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் 12-வது ஆண்டாக உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல நாடுகளில் சிறப்பு யோகா பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இந்தியாவிலும் வழக்கமான உற்சாகத்துடன் இந்த தினம் கொண்டாடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்ற கருப்பொருளில் நடத்தப்படும் யோகா தின கொண்டாட்டங்களுக்காக நாடு முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதில் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடி தலைமையில் கொல்கத்தாவில் யோகா பயிற்சி நடைபெற்றது. நாடு தழுவிய அமர்வாக காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வில் முதலில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அதன் பின்னர் அவரது தலைமையில் பல்வேறு யோகா பயிற்சிகள் நடைபெற்றன. இதில் அவருடன் 35 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் யோகா பயிற்சி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அதேநேரத்தில் கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு யோகா பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 10 லட்சம் பேர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய யோகா நிகழ்வு நடைபெற்ற இதுவே முதல் முறையாகும்.