நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியது இண்டர்போல்

குஜராத் ஆசிரமத்தில் 2 சிறுமிகள் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீஸ் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
நித்யானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்கியது இண்டர்போல்
Published on

ஆமதாபாத்,

சாமியார் நித்யானந்தா, இந்தியாவில் பல்வேறு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் இருந்து 2 சிறுமிகளை காணவில்லை என்று கடந்த நவம்பர் மாதம் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், ஆசிரமத்துக்கு நன்கொடை திரட்டுவதற்காக, சிறுமிகளை கடத்தி வந்து ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்ததாக நித்யானந்தா மீது குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, நித்யானந்தா தலைமறைவானார். அவர் ஈகுவடார் நாட்டின் அருகே கைலாசா என்ற தனிநாடு உருவாக்கி வசிப்பதாக தகவல் வெளியானது. அவரை தேடப்படும் நபர் என குஜராத் போலீசார் அறிவித்தனர்.

மேலும், அவரை பற்றிய தகவல் சேகரிப்பதற்காக, அவருக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் அனுப்ப சர்வதேச போலீசை (இன்டர்போல்) அணுகுமாறு சி.பி.ஐ.யை கேட்டுக்கொண்டனர். சி.பி.ஐ.யும் சர்வதேச போலீசிடம் வேண்டுகோள் விடுத்தது.

அதன் அடிப்படையில், நித்யானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீஸ் புளு கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த தகவலை ஆமதாபாத் போலீஸ் துணை சூப்பிரண்டு கே.டி.கமரியா தெரிவித்தார்.

மேலும், அடுத்தபடியாக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி இருப்பதாகவும் அவர் கூறினார். இதனால், நித்யானந்தாவுக்கு நெருக்கடி முற்றி உள்ளது. குற்ற வழக்கில் தேடப்படும் ஒருவரின் அடையாளம், இருப்பிடம், செயல்பாடுகள் ஆகியவை குறித்து வெளிநாடுகளிடம் தகவல் கேட்பதற்காக புளு கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய கோருவதற்காக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com