ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மிரட்டல் - மேலும் ஒருவர் கைது

ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் தஞ்சையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு மிரட்டல் - மேலும் ஒருவர் கைது
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் மாணவிகள் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியச் மாநில அரசு தடை விதித்த நிலையில், அது தொடர்பாக இஸ்லாமிய மாணவிகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு விதித்த தடை செல்லும் என தீர்ப்பளித்தனர். இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனிடையே இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரை போலீசார் ரகமத்துல்லா என்பவரை கைது செய்தனர்.

இதையடுத்து பெங்களூரு போலீசார் ரகமத்துல்லாவை அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது தஞ்சாவூரைச் சேர்ந்த ஜமால் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே ரகமத்துல்லா மீது பதிவு செய்யப்பட்ட அதே சட்டப்பிரிவுகளின் கீழ் ஜமால் இஸ்லாம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜமால் இஸ்லாம் 4-வது நபராக கைது செய்யப்பட்டுள்ளார் என பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கையை பெங்களூரு போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com