

டெல்லி,
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, இந்த ஆண்டு முதல், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, 2 முறை வாரியத் தேர்வுகளை எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஆண்டு 2-வது பொதுத் தேர்வுகள் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இதில், அதிகபட்சமாக 3 பாடங்களுக்கு தேர்வு எழுதி, தங்களின் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளலாம்.
அதற்கு, வரும் 31-ந் தேதி வரை கட்டணம் செலுத்தி, முதல் கட்டமாக விண்ணப்பிக்கலாம். அல்லது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து, 5 நாட்களுக்குள் 2-ம் கட்டமாக விண்ணப்பிக்கலாம். அடுத்த 2 நாட்களுக்கு தாமதக் கட்டணம் செலுத்தி, 3-ம் கட்டமாகவும் விண்ணப்பிக்கலாம். அதே சமயம், முதல் கட்ட பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள், 2-ம் கட்ட பொதுத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கமாட்டார்கள் என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.