விளை நிலத்திற்குள் புகுந்து காபி செடிகளை நாசமாக்கிய காட்டுயானைகள்

என்.ஆர்.புரா அருகே விளை நிலத்திற்குள் புகுந்து காபி, மிளகு செடிகளை காட்டுயானைகள் மிதித்து நாசப்படுத்தியுள்ளது.
விளை நிலத்திற்குள் புகுந்து காபி செடிகளை நாசமாக்கிய காட்டுயானைகள்
Published on

சிக்கமகளூரு-

என்.ஆர்.புரா அருகே விளை நிலத்திற்குள் புகுந்து காபி, மிளகு செடிகளை காட்டுயானைகள் மிதித்து நாசப்படுத்தியுள்ளது. இதனால் பீதியடைந்துள்ள கிராம மக்கள் காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

காட்டுயானைகள் அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகாவில் உள்ளது லிங்காபுரா, இளுவள்ளி கிராமங்கள். இந்த கிராமம் பத்ரா அணைக்கட்டின் பின்புறம் உள்ளது. மேலும் இந்த கிராமத்தையொட்டி பத்ரா வனவிலங்குகள் சரணாலயம் உள்ளது. இதனால் அடிக்கடி இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் லிங்காபுரா மற்றும் இளுவள்ளி கிராமத்திற்குள் புகுந்து, அங்குள்ள நெல் மற்றும் தோட்டத்தில் விளைவிக்கும் காய்கறிகளை மிதித்து நாசப்படுத்திவிட்டு செல்கின்றன.

மேலும் விவசாய நிலத்திற்கு வேலைக்கு செல்லும் பொதுமக்களையும் காட்டுயானைகள் அச்சுறுத்தி வருகின்றன. இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்கும்படி கிராமமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி வனத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும் அந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க முடியவில்லை. இந்தநிலையில் மீண்டும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.

விளை பயிர்கள் நாசம்

நேற்று முன்தினம் பத்ரா வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து வந்த 20-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் விளைநிலத்திற்குள் புகுந்து காபி, மிளகு, வாழை மரம், கரும்பு ஆகியவற்றை மிதித்து நாசப்படுத்தின. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்கள் நாசமானதாக கூறப்படுகிறது. இதை பார்த்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அந்த காட்டுயானைகளை துரத்த முயற்சித்தனர். ஆனால் காட்டுயானைகள் செல்லவில்லை. மாறாக பொதுமக்களை காட்டுயானைகள் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கிராமமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் பட்டாசுகளை வெடித்து யானைகளை பத்ரா வனவிலங்குகள் சரணாலயப்பகுதிகளுக்குள் துரத்தினர். இதையடுத்து கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இருப்பினும் தொடர்ந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருவதால், அதன் நடமாட்டத்தை நிரந்தரமாக தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கிராமமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான காபி, மிளகு, நெல், கரும்பு, வாழை மரங்கள் ஆகியவை நாசமாகியுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினர்.

அதை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com