புதுச்சேரியில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு: அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் முதலீட்டாளர்கள் மாநாடு விரைவில் நடத்தப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
புதுச்சேரியில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு: அமைச்சர் நமச்சிவாயம்
Published on

ஆய்வுக்கூட்டம்

புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள பிப்டிக் அலுவலகத்தில் நேற்று தொழிற்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் பிப்டிக் மேலாண் இயக்குனர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்ட முடிவில் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொழில்முனைவோருக்கு கடன்

புதுச்சேரியில் பிப்டிக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் தொழில் நகரங்கள் எவ்வாறு செயல்படுகிறது, அதனை எவ்வாறு மேம் படுத்துவது, புதிதாக தொழில் நகரங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன்களை வசூல் செய்வது, புதிதாக தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. புதுச்சேரிக்கு புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும், மாநிலத்தின் வருவாயை பெருக்க வேண்டும் என்பது தான் பிப்டிக்கின் நோக்கமாகும். இதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரூ.30 கோடி ஒதுக்கீடு

ரோடியர் மில் தொழிலாளர்கள் தங்களுக்கு நிலுவை சம்பளம், பணிக்கொடை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது தொழிலாளர்களுக்கு அரசு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த பணத்தின் மூலம் ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அரசு புதிய தொழிற்கொள்கையை உருவாக்கியது. ஆனால் அதனை முழுமையாக நிறைவேற்றவில்லை. எனவே புதிய தொழிற்சாலைகள் எதுவும் புதுவையில் தொடங்கப்படவில்லை.

முதலீட்டாளர்கள் மாநாடு

எங்களின் ஆட்சி காலத்தில் புதிய தொழிற்கொள்கை உருவாக்கப்பட்டு அது முழுமையாக செயல்படுத்தப்படும். அப்போது நிறைய தொழிற்சாலைகள் புதுவைக்கு வரும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மாநிலத்தின் வருவாய் பெருகும்.புதுச்சேரியில் முதலீட்டாளர்கள் மாநாடு விரைவில் நடத்தப்படும். இது தொடர்பாக தற்போது ஆலோசனை நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com