ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு; அமலாக்க துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி ப. சிதம்பரம் மனு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் அமலாக்க துறை கைது செய்ததற்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி ப. சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு; அமலாக்க துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமீன் கோரி ப. சிதம்பரம் மனு
Published on

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த ஆகஸ்டு 21-ந் தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் கடந்த 21ந்தேதி ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கடந்த 16-ந்தேதி கைது செய்தது. தொடர்ந்து அவரது காவலை நீட்டிக்க கோரி கடந்த 24ந்தேதி அமலாக்க பிரிவு சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் முறையீடு செய்தது.

இதன்படி, ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை காவலை வருகிற 30-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி அஜய்குமார் குஹர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ப. சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு செய்துள்ளார். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். பட்டேல் மற்றும் நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரம் வேறு நீதிமன்றம் ஒன்றில் நாளை விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனிடையே, அமலாக்க துறை காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், விசாரணை நீதிமன்றம் ஒன்றில் ப. சிதம்பரம் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com