

புதுடெல்லி,
கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, கடந்த 28-ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, ஒரு நாள் காவலில் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர், அந்த காவல் மேலும் 5 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது. சிபிஐ காவல் நிறைவடையவிருக்கும் நிலையில், கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மற்றொரு நபரான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் இந்திராணி முகர்ஜி, மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருவரிடமும் கூட்டாக விசாரணை நடத்த முடிவு செய்த சிபிஐ அதிகாரிகள், கார்த்தி சிதம்பரத்தை ஞாயிற்றுக்கிழமை மும்பை அழைத்துச் சென்றனர். சிறையில் இருவரிடமும் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு எதிராக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களை ரத்து செய்யக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் தரப்பில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில், சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சம்மன்களை அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகாரம் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 6) நடைபெறவுள்ள நிலையில், அதனுடன் சேர்த்து புதிய மனுவையும் விசாரிக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு ஒப்புக் கொண்டது.
இது தொடர்ந்து இந்த மனுக்கள் மீதான் விசாரணை இன்று தொடங்கியது. ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க சுப்ரீம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும் அமலாக்கத்துறை, சிபிஐ பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு விசாரணை மார்ச் 9 ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு இடைக்கால பாதுகாப்பு தேவை என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து உள்ளது.
கார்த்தி சிதம்பரம் சார்பில் வாதாடிய கபில்சிபல் "நாங்கள் ஒவ்வொரு வழியில் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம், நாங்கள் அவ்வாறு செய்தோம்.
கைது செய்யப்படுவது பற்றி கவலைப்படுகிறேன் என வாதிட்டார்.
#KartiChidambaram #SupremeCourt