மகளிர் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு: 26 லட்சம் பயனாளர்களுக்கு பணம் வழங்குவதை நிறுத்திய மராட்டிய அரசு


மகளிர் உதவித்தொகை திட்டத்தில் முறைகேடு: 26 லட்சம் பயனாளர்களுக்கு பணம் வழங்குவதை நிறுத்திய மராட்டிய அரசு
x
தினத்தந்தி 28 July 2025 8:11 PM IST (Updated: 28 July 2025 9:08 PM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கான திட்டத்தில் நிதி உதவி பெற்ற ஆண்களிடம் இருந்து அவர்கள் பெற்ற பணம் திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 நிதி உதவி வழங்கும் 'லாட்கி பகின்' திட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலையொட்டி அவசர கதியில் கொண்டு வரப்பட்டதால் இந்த திட்ட பயனாளர்கள் விவரங்கள் முறையாக ஆய்வு செய்யப்படவில்லை. தற்போது திட்டத்தில் முறைகேடாக நிதி உதவி பெற்று வரும் நபர்கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் 'லாட்கி பகின்' திட்டத்தில 14 ஆயிரத்து 298 ஆண்கள் முறைகேடாக நிதி உதவி பெற்று வந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. நேற்று முன்தினம் துணை முதல்-மந்திரி அஜித்பவார் அந்த தகவலை தெரிவித்து இருந்தார். மேலும் பெண்களுக்கான திட்டத்தில் நிதி உதவி பெற்ற ஆண்களிடம் இருந்து அவர்கள் பெற்ற பணம் திரும்ப பெறப்படும் என கூறியிருந்தார்.

இந்தநிலையில் 'லாட்கி பகின்' திட்டத்தில் உரிய தகுதியில்லாமல் 26.3 லட்சம் பயனாளர்கள் நிதி உதவி பெற்று வந்ததாக மந்திரி அதீதி தட்காரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

"பெண்கள் நலத்துறை 'லாட்கி பகின்' திட்ட பயனாளர்கள் தகவல்களை ஆய்வு செய்து வருகிறது. இதில் வருமான வரித்துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் 'லாட்கி பகின்' திட்டத்தில் பயன் பெற தகுதியில்லாத 26.3 லட்சம் பெண்கள் நிதி உதவி பெற்று வருவது தெரியவந்தது.

சிலர் 'லாட்கி பகின்' தவிர வேறு திட்டப்பயன்களையும் பெற்று வந்து உள்ளனர். அவர்களின் பெயர் பயனாளர்கள் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சரிபார்ப்பார்கள். அதன்பிறகு தகுதி உள்ளவர்கள் நீக்கப்பட்டு இருந்தால் அவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவார்கள்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story