நடிகை குஷ்பு பா.ஜனதாவில் இணைகிறாரா? அவரே அளித்த பதில்

தான் பா.ஜனதாவில் இணைய போவதாக பரவும் தகவலுக்கு நடிகை குஷ்பு பதில் அளித்து உள்ளார்.
நடிகை குஷ்பு பா.ஜனதாவில் இணைகிறாரா? அவரே அளித்த பதில்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு, பா.ஜனதாவில் இணைய போவதாகவும், இதுதொடர்பாக தான், தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்து கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்ததாகவும் தகவல் பரவியது.

இந்த நிலையில் குஷ்பு நேற்று மதியம் டெல்லி வந்தார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரிடம் அது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்து குஷ்பு கூறியதாவது:-

டெல்லியில் கட்சி தொடர்பாக பல வேலைகள் உள்ளன. எல்லாவற்றையும் நான் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. நான் டெல்லி வருவது இவ்வளவு பெரிய விஷயமாக எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லி எனக்கு புதிது கிடையாது. அடிக்கடி வந்து போவேன். தற்போது ஊரடங்கு காரணமாக ஏழெட்டு மாதத்துக்கு பிறகு வந்து இருக்கிறேன்.

நான் பா.ஜனதாவில் இணைவதாக வதந்திகள் பரவின. நான் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று பா.ஜனதா தலைவர் முருகன் நினைக்கிறார். ஆனால் நான் காங்கிரசில் நன்றாக இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். நேற்றுகூட (நேற்று முன்தினம்) சென்னையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜனதா பற்றி தாறுமாறாக பேசி இருக்கிறேன்.

கட்சிக்கு அப்பாற்பட்டு பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறுவது என்பது உண்மையிலேயே சந்தோஷமானது. உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது அவர் குணம் அடைந்து வரவேண்டும் என்று நான் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருந்தேன். அவர் பா.ஜனதாவினருக்கு மட்டும் தான் உள்துறை மந்திரியா? நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அவர் தான் உள்துறை மந்திரியாக இருக்கிறார். பிரதமர் மோடி பிறந்த நாளுக்கும் நான் வாழ்த்து சொன்னேன். இதற்கு முன்பு அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் போன்றோருக்கெல்லாம் வாழ்த்து சொல்லி இருக்கிறேன்.

இதெல்லாம் எனக்கு சகஜம். இதில் தவறு ஒன்றும் இல்லை. இதன் காரணமாகத்தான் எனது 50-வது பிறந்த நாளுக்கு பா.ஜனதாவில் இருந்தும் வாழ்த்து சொன்னார்கள். நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்து இருந்தேன். இதையெல்லாம் பார்க்கும்போது ஆரோக்கியமான அரசியலாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், பாலியல் பலாத்காரம் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளிக்கையில், பா.ஜனதா ஆளும் மாநிலங்களா? அல்லது காங்கிரஸ் ஆளும் மாநிலங்களா?. பெண்கள் பாதிக்கப்பட்டது, எந்த மாநிலத்தில் அதிகம் என்று பார்க்கக்கூடாது. இந்தியாவின் மகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com