அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா துணை முதல்-மந்திரி ஆகிறார்?

அஜித்பவார் விமான விபத்தில் இறந்ததை தொடர்ந்து அவர் வகித்த பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா துணை முதல்-மந்திரி ஆகிறார்?
Published on

மும்பை,

அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார். இவர் தற்போது மாநிலங்களை உறுப்பினராக உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சாகன் புஜ்பால் மற்றும் பிரபுல் படேல் ஆகியோர் சுனேத்ரா பவாரை சந்தித்ததாகவும், அவரை கட்சியின் தலைவராக ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. இது மட்டு மின்றி, மறைந்த அஜித் பவார் தொகுதியின் இடைத்தேர்தலில் சுனேத்ரா பவார் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

அஜித் பவாரின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு நிருபர்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் மராட்டிய மாநில மந்திரியுமான நர்ஹரி ஜிர்வால், மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவாரின் மறைவைத் தொடர்ந்து சுனேத்ரா பவாரை மாநில அமைச்சகத்தில் சேர்க்க வேண்டும் என்று பொது மக்கள் விரும்புவதாகக் கூறியிருந்தார். இதனிடையே அஜித் பவாருடன் பணியாற்றிய சாகன் புஜ்பால் உட்பட சிலர் தங்களுக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைக்கும் என்றும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அஜித்பவாருக்கு 2 மகன்கள். மூத்த மகன் பார்த் பவார் மற்றும் இளைய மகன் ஜெய் பவார். மராட்டியத்தின் மாவாலாவில் இருந்து மக்களவைத் தேர்தலில் பார்த் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். அதே நேரத்தில் ஜெய் பவாருக்கு எந்த அரசியல் ஈடுபாடும் இல்லை. 2 தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் இணைப்பு குறித்து பவார் குடும்பத்தினர் ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. அஜித் பவார் துணை முதல்-மந்திரி மற்றும் நிதி மந்திரி போன்ற முக்கியமான பதவிகளை வகித்தவர்.

சுனேத்ரா பவார் இந்தப் பதவிகள் அனைத்தையும் வகிப்பது சாத்தியமில்லை என்றும், தேசியவாதக் கட்சியின் தலைவராக மட்டும் ஆகலாம் என சிலர் கூறி வருகின்றனர். அஜித்பவாரின் சகோதரி சுப்ரியா சுலே எம்.பி. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் மகள் ஆவார். அஜித்பவார் மறைவான தகவல் வெளியானதில் இருந்து, சுப்ரியா சுலே சுனேத்ரா பவாரை விட்டுப்பிரியவில்லை. தனது கணவரின் உடலைப்பெற சுனேத்ரா பாராமதிக்கு வந்தபோது அவரது கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டு சுப்ரியா சுலே அங்கே இருந்தார்.

அரசியல் ரீதியாகப் பிரிந்திருந்தாலும், மூத்த தலைவர்கள், அதிகாரிகளை சந்திக்கும் போது சுனேத்ராவுக்கு உறுதுணையாக நின்றது சுப்ரியாதான். முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மராட்டிய கவர்னர், துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே என ஒவ்வொருவரும் இரங்கல் தெரிவிக்க வரும்போது மைத்துனி சுப்ரியா ஆதரவாக இருப்பதை சுனேத்ரா உறுதி செய்தார். அஜித்பவார் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது கூட முன்னின்று அனைத்து ஏற்பாடுகளையும் சுப்ரியா பொறுப்பேற்று, குடும்பத்தை நிர்வகித்து, கூட்டத்தை ஒருங்கிணைத்து செயல்பட்டார். எனவே சுப்ரியா சுலே ஆலோசனையை கேட்டே சுனேத்ரா முடிவெடுப்பார் என்கின்றன தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள். அதே நேரத்தில் அஜித்பவாரின் தொகுதியில் அவரது மூத்த மகன் பார்த் பவாரை போட்டியிட செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சுனேத்ரா பவார் மராத்வாடாவின் தாராசிவ் பகுதியைச் சேர்ந்தவர், அரசியல் செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். முன்னாள் மாநில மந்திரியும், மக்களவை உறுப்பினருமான பத்மசிங் பாட்டீலின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. 1985-ம் ஆண்டு அஜித் பவாரை மணந்த சுனேத்ரா, நீண்ட காலமாக 'பவார் குடும்பத்தின் மருமகள்' என்றே அறியப்பட்டார். பொது வாழ்க்கையில் இருந்து அவர் விலகியே இருந்தார்.

ஆனால். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் நுழைந்தார். தன் நாத்தனாரும், சரத்பவாரின் மகளுமான சுப்ரியா சுலேவுக்கு எதிராக பாராமதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இப்போட்டியில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சுனேத்ரா தோல்வியடைந்தார்.

சுனேத்ரா பவார் பாராமதி மற்றும் மராத்வாடா பகுதிகளில் நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை நடத்துவாராம். விவசாயப் பின்னணி கொண்ட அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த இவருக்குச் சமூக சேவகி, தொழில் அதிபர் மற்றும் கல்வி நிர்வாகி என பல முகங்கள் உள்ளது. தனக்கென ஒரு தனிப்பட்ட அரசியல் மற்றும் சமூகப் பாதையைக் கொண்டவராக இருக்கிறார். எனவே கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் அவரே துணை முதல்-மந்திரி ஆகும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com