

பெங்களூரு
கர்நாடகாவில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாருடைய தொலைபேசி அழைப்புகள் ஒட்டு கேட்கப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய மந்திரி எச்.டி. குமாரசாமி இதனை கூறியிருந்த நிலையில், முதல்-மந்திரி சித்தராமையா இதனை மறுத்துள்ளார்.
இதுபற்றிய கேள்வி ஒன்றுக்கு மந்திரி பரமேஷ்வரா நிருபர்களிடம் இன்று கூறும்போது, நீங்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறும்போது தெளிவாக கூறுங்கள் என எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவரை கேட்டு கொள்ள விரும்புகிறேன்.
யாருடைய தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டது என சரியாக கூறுங்கள். உங்களிடம் தகவல் எதுவும் இருக்கிறது என்றால், அதனை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் அது யாரென்று கண்டுபிடிப்போம். எனக்கு தெரிந்தவரை, தொலைபேசி ஒட்டு கேட்பு எதுவும் இல்லை என முதல்-மந்திரி சித்தராமையாவே கூறியிருக்கிறார் என கூறினார்.
இந்த விவகாரத்தில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறும்போது, சிவக்குமாருடனான என்னுடைய பிணைப்பு பாலும், தேனும் போன்றது. இந்த முறை எங்களுடைய கட்சி ஆட்சிக்கு வந்ததும், வேலையில்லாமல் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் எனக்கும், சிவக்குமாருக்கும் இடையேயான உறவில் கசப்புணர்வை ஏற்படுத்த பார்க்கின்றனர் என குற்றச்சாட்டாக கூறினார்.
அசோக் அல்லது எச்.டி. குமாரசாமிக்கு இது வேலைக்கு ஆகாது என தெரியும். அது எங்களுடைய பாலும் தேனும் போன்ற உறவில் எந்த பாதிப்பும் ஏற்படுத்த போவதில்லை என கூறினார். முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமாருடைய தொலைபேசி அழைப்புகளை உளவு பார்க்கிறார் என மத்திய மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், அதனை சித்தராமையா நிராகரித்து உள்ளார்.