அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதா? - தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதா? என அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதா? - தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதி வெளியிட்ட அரசாணையில், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பி.அய்யாக்கண்ணு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு 2017-ம் ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், 5 ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான செயல். எனவே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், 5 ஏக்கருக்கு குறைவான விவசாய நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி சலுகை என்பதை நீக்கிவிட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் மற்றும் நகைக்கடன் தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்பதை குறிப்பிட்டு, அந்த அரசாணையை மாற்றி அமைக்கவேண்டும். இதற்கான உத்தரவை 3 மாதங்களுக்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, மதுரை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 3-ந் தேதி உத்தரவிட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஆர்.பானுமதி, எஸ்.ஏ.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.நட்ராஜ், கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன், தமிழக அரசு வக்கீல் பா.வினோத் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள். அய்யாக்கண்ணு தரப்பில் வக்கீல்கள் எஸ்.முத்துகிருஷ்ணன், ஜோதிகண்ணு, மனோஜ் செல்வராஜ் ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணையின்போது, அய்யாக்கண்ணு தரப்பில், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையால் அனைத்து தரப்பு விவசாயிகளும் பாதிப்பு அடைந்து உள்ளனர். 10 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயியும் பாதிக்கப்பட்டு உள்ளார். அதேபோல் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயியும் பாதிக்கப்பட்டு உள்ளார். கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். விவசாய துறையில் அனைத்து விவசாயிகளின் பங்களிப்பும் சரிசமமாகத்தான் இருக்கிறது. ரூ.1980 கோடி தள்ளுபடி செய்வது அரசுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே அனைத்து விவசாயிகளின் கடனையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதாடுகையில், விவசாய கடனை தள்ளுபடி செய்வதற்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், இது அரசின் கொள்கை முடிவு என்றும், அரசின் கொள்கை முடிவுகளில் கோர்ட்டு தலையிட முடியாது என்றும் கூறினார்கள்.

அப்போது நீதிபதி ஆர்.பானுமதி குறுக்கிட்டு, அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்வதால் அரசுக்கு எவ்வளவு கூடுதலாக செலவாகும்? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் பதில் அளிக்கையில் கூறியதாவது:-

இது தொடர்பான துல்லியமான விவரத்தை அரசிடம் கேட்டு தெரிவிக்கிறோம். 5 ஏக்கருக்கு மேலாக விவசாய நிலம் உள்ளவர்களுக்கு கடன் வழங்கிய வகையில் ரூ.1980 கோடி நிலுவை உள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளை இரண்டு வகையாக பிரித்து அதன் பின்னர் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

அரசு அனைத்து அம்சங்களையும் தீவிரமாக ஆராய்ந்தே சிறு, குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இதனை கருத்தில் கொள்ளாமல் ஐகோர்ட்டு அனைத்து விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டு உள்ளது. எனவே சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், சிறு, குறு விவசாயிகளின் நலனை காக்க அவர்களின் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறுகிறீர்கள். அது அரசின் கொள்கை முடிவு என்றும் கூறுகிறீர்கள். ஆனால் விவசாயிகள் அனைவரும் விவசாயிகள் தானே? தஞ்சை மாவட்டத்தில் 2 ஏக்கர் நிலம் வைத்திருப்பவரையும், வறட்சி மிகுந்த பகுதியில் 5 ஏக்கருக்கும் மேலாக நிலம் வைத்து இருக்கும் விவசாயியையும் ஒப்பிட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்கள்.

அத்துடன், தமிழகத்தில் அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 24-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் அதுவரை ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடை தொடரும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com