பா.ஜ.க.வில் சேருகிறாரா கமல்நாத்...!! காங்கிரசார் கூறுவது என்ன...?

இந்திரா காந்தியின் 3-வது மகன் காங்கிரசை விட்டு வெளியேறுவாரா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பா.ஜ.க.வில் சேருகிறாரா கமல்நாத்...!! காங்கிரசார் கூறுவது என்ன...?
Published on

புதுடெல்லி,

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் கமல்நாத் (வயது 77). மத்திய பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா தொகுதியில் இருந்து 9 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவரது மகன் நகுல் நாத், இந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்நிலையில், கமல்நாத் டெல்லிக்கு சென்ற நிலையில், அவர் பா.ஜ.க.வில் சேர போகிறார் என தகவல்கள் வெளிவந்தன. நகுல் நாத்தும், தந்தையுடன் பா.ஜ.க.வில் சேருவார் என யூகங்கள் வெளிவந்தன.

இதுபற்றி கமல்நாத்தின் நெருங்கிய வட்டாரங்கள் கூறும்போது, அவர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. கட்சியில் நடந்து வரும் விசயங்களால் அவர் மகிழ்ச்சியற்று இருக்கிறார். 5 தசாப்தங்களுக்கு முன் அவர் கட்சியில் சேரும்போது இருந்ததுபோன்று காங்கிரஸ் இல்லை என உணர்கிறார். டெல்லியில் அமித்ஷாவையோ அல்லது பிரதமர் மோடியையோ அவர் சந்திக்கவில்லை.

மத்திய பிரதேச பா.ஜ.க. தலைவர் வி.டி. சர்மா போன்றோர், கமல்நாத் கட்சியில் சேர வரும்படி அழைக்கிறோம் என கூறுகின்றனர் என அந்த வட்டாரம் தெரிவிக்கின்றது. ஒருபுறம், ராஜ்யசபை சீட் கிடைக்காத வருத்தத்தில் அவர் இருக்கிறார் என்றும், கமல்நாத்துக்கு எதிராக ராகுல் காந்தி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதேபோன்று, டெல்லி வந்தடைந்த கமல்நாத்திடம், பா.ஜ.கவில் சேருவீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதுபோன்று ஏதேனும் இருக்குமென்றால், ஊடகத்திடம் முதலில் தெரிவிப்பேன் என கூறினார்.

எனினும், மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி , இந்திரா காந்தியால், 3-வது மகன் என அழைக்கப்பட்ட கமல்நாத், பா.ஜ.க.வில் சேருவது பற்றிய யூகங்களை புறந்தள்ளியுள்ளார். இதுபோன்ற பேச்சுகள் அடிப்படையற்றவை என அவர் கூறினார்.

இந்திரா காந்தியின் 3-வது மகன் காங்கிரசை விட்டு வெளியேறுவாரா? என்று அவர் கேள்வி எழுப்பினார். கமல்நாத், ராஜ்யசபை சீட்டுக்கு அசோக் சிங்கை நியமிக்க கோரி பேசுவதற்காக டெல்லி வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com