

பெங்களூரு,
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே. சிவக்குமாரும் பதவி வகித்து வருகின்றனர். எனினும், 2023-ம் ஆண்டு அக்கட்சி ஆட்சியை பிடித்தபோது, முதல்-மந்திரி அதிகார பகிர்வு தொடர்பாக பரபரப்பான தகவல் வெளியானது. இதன்படி, இரண்டரை வருட காலம் சித்தராமையாவும், மற்றொரு இரண்டரை வருட காலத்தில் டி.கே. சிவக்குமாரும் முதல்-மந்திரி பதவியை வகிப்பார்கள் என தகவல் கசிந்தது.
ஆனால், கட்சியின் தலைமையிடம் இருந்து இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. ஆனால், தலைமைத்துவம் தொடர்பான பூசல் கட்சிக்குள் புகைந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், 2025-ம் ஆண்டு நவம்பரில் இந்த ஆட்சியின் முதல் இரண்டரை வருட காலம் நிறைவடைந்தது. இதனால், முதல்-மந்திரி மாற்றம் செய்யப்படுவார் என யூகங்கள் கிளம்பின.
இந்நிலையில், நெருக்கடியான காலகட்டத்தில் சித்தராமையா எனக்கு துணை நின்றவர் என்றும், சித்தராமையாவின் நெருக்கடியான காலகட்டத்தில் அவருக்கு நான் துணை நின்றேன் என்றும் டி.கே. சிவக்குமார் கூறினார். இதன்பின்னர் இந்த விவகாரம் பெரிதும் பேசப்படாமல் இருந்தது.
இந்த நிலையில், 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய கட்சி மேலிடம் உத்தரவு அளித்து விட்டது என சித்தராமையாவின் மகனான எம்.எல்.சி. யதீந்திரா சமீபத்தில் கூறினார். இதனால், அந்த பூசல் ஏற்பட்டது உண்மைதான் என ஒருபுறம் உறுதியானது. இந்த விவகாரம் மீண்டும் பரபரப்படைந்தது.
இதுபற்றி டி.கே. சிவக்குமாரிடம் கேட்கப்பட்டபோது, இந்த விவாதத்திற்குள் மீண்டும் செல்ல அவர் மறுத்து விட்டார். ஆனால் அந்த கேள்விக்கு, காலம் பதில் சொல்லும் என்று பரபரப்பு தொடரும் வகையிலான பதிலை கூறி சென்றார்.
கட்சியின் மேலிடம் மீது விசுவாசம் வைத்துள்ளேன் என்றும், கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு அனைத்து தலைவர்களும், ஆதரவாளர்களும் கட்டுப்பட வேண்டும் என்றும் கூறினார். இதனால், முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் இருந்து அவர் பின்வாங்காமல் உள்ளார் என்பது போன்று பேசினார்.
இந்த சூழலில், கர்நாடகாவில் முக்கியத்துவம் வாய்ந்த வருடாந்திர பட்ஜெட் கூட்டம் நடந்தது. ஆனால், இதில் பங்கேற்காமல் டி.கே. சிவக்குமார் புறக்கணித்து இருக்கிறார். இதுபற்றி குறிப்பிட்ட முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதில், அவர் அசாம் தேர்தல் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியினரின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக டெல்லிக்கு சென்றுள்ளார் என தெரிய வந்துள்ளது என்றார். அதனால், அவர் இல்லாமலேயே பட்ஜெட் கூட்டம் நடைபெறும் என கூறினார்.
அசாமில் வரவுள்ள சட்டசபை தேர்தலுக்கான முக்கிய பொறுப்பாளராக டி.கே. சிவக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.
எனினும், முதல்-மந்திரி பதவி பற்றி கேட்கப்பட்டதற்கு, கட்சி மேலிட முடிவே இறுதியானது. இதனை ஏன் தொடர்ந்து கேட்டு கொண்டிருக்கிறீர்கள்? சிவக்குமார் உங்களிடம் ஏதேனும் கூறினால், நீங்கள் அவரிடமே அதுபற்றி கேளுங்கள் என சித்தராமையா கூறினார்.