

புதுடெல்லி,
இந்தியாவில் புதிய இரட்டை உருமாறிய (பிறழ்வு திரிபு) வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மராட்டியத்தில் இது அதிகளவில் காணப்படுகிறது. இந்த புதிய வைரஸ்கள், நமது நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிப்பதுடன், நோயின் பாதிப்பையும் அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகின.
அதே நேரத்தில் இந்த வைரஸ் ஆபத்தானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பற்றி மரபியல் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் அனுராக் அகர்வால் கூறுகையில், நாங்கள் அறிந்தவரையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வைரசோ அல்லது இந்தியாவில் கண்டறியப்பட்ட இந்த இரட்டை பிறழ்வு திரிபு வைரசோ தீவிரமான பாதிப்பையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்துபவை அல்ல.
இங்கிலாந்து வைரசும், இந்தியாவின் புதிய வைரசும் வேகமாக பரவக்கூடியவையாக இருக்கலாம். ஆனால் இந்திய வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்பது நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.