பீகார், மேற்கு வங்காளத்தை இணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க திட்டமா..? விளக்கம் அளித்த மத்திய அரசு

புதிதாக 9-வது யூனியன் பிரதேசம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
பீகார், மேற்கு வங்காளத்தை இணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க திட்டமா..? விளக்கம் அளித்த மத்திய அரசு
Published on

சென்னை,

பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் சில மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள சிலிகுரி வழித்தடம் என்ற நிலப்பரப்பு, வடகிழக்கு மாநிலங்களின் நுழைவு வாயிலாக இருக்கிறது. இது வங்காளதேசம், பூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள மெல்லிய ஒரு கோடு போன்ற பகுதியாகும்.

அங்குள்ள 'கோழியின் கழுத்து' என்று அழைக்கப்படும் பகுதி ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல் காரணமாக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிகுந்ததாக கருதப்படுகிறது. இந்த சூழலில், பீகார், மேற்கு வங்காளம் எல்லையில் புதிதாக யூனியன் பிரதேசத்தை மத்திய அரசு உருவாக்க திட்டமிட்டிருப்பதாகவும், இதுபற்றி உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

பீகாரில் உள்ள புர்னியா, அராரியா, கிருஷ்ணகஞ்ச் மற்றும் கைத்தார் ஆகிய 4 மாவட்டங்களையும், மேற்கு வங்காளத்தில் மால்டா, உத்தர் தினாஜ்பூர் ஆகிய 2 மாவட்டங்களையும் இணைத்து இந்தியாவின் 9-வது யூனியன் பிரதேசம் உருவெடுக்க இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான பத்திரிகை அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த தகவல் தவறானது. புதிதாக யூனியன் பிரதேசத்தை உருவாக்குவது தொடர்பான பரிந்துரைகள் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com