

புதுடெல்லி,
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள சீக்கிய இளைஞர்களுக்கு பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. பயிற்சி வழங்குகிறது என பாராளுமன்ற குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் சீக்கிய இளைஞர்கள் பாகிஸ்தானால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், இந்தியாவிற்கு எதிரான போலி பிரசாரத்திற்கு அவர்களை தூண்டுகிறது எனவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் பாராளுமன்ற குழுவிடம் தெரிவித்து உள்ளனர்.
பாராளுமன்ற குழுவிடம் மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்து உள்ள அறிக்கையில், பஞ்சாப் மற்றும் இந்தியாவில் உள்ள பிற பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுக்க பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு அந்நாட்டின் உளவுத்துறையிடம் இருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நோக்கத்திற்காக பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் சீக்கிய பயங்கரவாத குழுக்கள், சீக்கிய இளைஞர்களுக்கு பயங்கரவாத பயிற்சியை வழங்குவதில் ஈடுபட்டு உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் அந்நாட்டு உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. வசதியுடன் சீக்கிய இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்க சிறைக்கைதிகள், விசாரணைக்கைதிகள், குற்றவாளிகள் மற்றும் கடத்தல்காரர்களை பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் சீக்கிய பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்துகிறது. இன்டர்நெட் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்கள் தவறான பாதைக்கு அழைத்து செல்லப்படுவது என்பது மிகவும் பெரிய சவலாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.