ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினரை வரும் 16-ந்தேதி வரை விசாரிக்க என்.ஐ.ஏ. கோர்ட்டு அனுமதி

டெல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்த ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினரை வரும் 16-ந்தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினரை வரும் 16-ந்தேதி வரை விசாரிக்க என்.ஐ.ஏ. கோர்ட்டு அனுமதி
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், டெல்லி பட்லா ஹவுஸ் பகுதியில் மொஹ்சின் அகமது என்பவரின் குடியிருப்பு வளாகத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் இணைந்து அவர் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. தவிர, சமூக ஊடகம் வழியே, பயங்கரவாதத்திற்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த அமைப்புக்கு நிதி திரட்டியதுடன், இளைஞர்களை தவறாக வழி நடத்தும் எண்ணத்துடன் செயல்பட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்டி, அதனை சிரியா மற்றும் பிற நாடுகளுக்கு கிரிப்டோகரன்சி வடிவில் அனுப்பியுள்ளார்.

இதன் வழியே ஐ.எஸ்.ஐ.எஸ். செயல்பாடுகளை தீவிரப்படுத்த முயன்றுள்ளார். தனது தொழில்நுட்ப அறிவால், புலனாய்வு அமைப்புகளிடம் சிக்காமல் அவர் தப்பி வந்துள்ளார் என்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் விசாரணையில் உள்ள அகமது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்தது எப்போது மற்றும் அவரது கூட்டாளிகள் எல்லாம் யார் என்றும் தெரிந்து கொள்வதற்கான கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.

அடுத்த ஒரு வாரத்தில் நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள சூழலியில் டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இதனை தொடர்ந்து காஷ்மீரில் தோடா மற்றும் ஜம்மு நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து காஷ்மீர் போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் (சி.பி.ஆர்.எப்.) உள்ளிட்டோர் அந்த பகுதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி உள்ளனர்.

சோதனை நடைபெறும் பகுதிகளுக்குள் ஒருவரும் உள்ளே நுழையாதபடிக்கும், வெளியே ஒருவரும் செல்லாதபடிக்கும் தடுப்பு அரண் அமைத்து பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு உள்ளனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கப்படும் நோக்கிலும் அவர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டும் தோடா மற்றும் ஜம்மு நகரின் பல்வேறு பகுதிகளில் இதேபோன்ற சோதனைகள் நடந்தன.

இதற்கு முன்பு, வடகாஷ்மீரின் பாராமுல்லா, பூஞ்ச், குப்வாரா பகுதிகள் உள்பட 7 இடங்களில் மாநில புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனை நடந்து வருகிறது.

இந்த சூழலில், ஐ.எஸ்.ஐ.எஸ். உறுப்பினர் அகமதுவை என்.ஐ.ஏ. கோர்ட்டில் அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். பின்னர், 6 நாட்கள் விசாரணை காவலுக்கு அனுமதி தரவேண்டும் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி விசாரணை மேற்கொண்ட என்.ஐ.ஏ. கோர்ட்டு, விசாரணை காவலுக்கு அகமதுவை அனுப்புவதற்கான நாட்களை பற்றிய உத்தரவை ஒத்தி வைத்தது. உத்தரவு விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

இந்த நிலையில், அகமதுவை வருகிற 16-ந்தேதி வரை விசாரணை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கோர்ட்டு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com